கரோனாவின் கோரதாண்டவத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கி போய் கிடக்கிறது. நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சாதாரண மளிகைக் கடை கூட காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்று செய்வதறியாத ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கி தங்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துவருகின்றனர்.
ஆனால் சாலையோரத்தில் தங்கும் ஆதரவற்றவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோர் உணவின்றி தவிக்கும் அவல நிலை குறித்த செய்திகள் தினந்தோறும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்துகின்றன.
இவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு தன்னார்வ அமைப்பாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் ஆங்காங்கே தங்களால் இயன்ற உதவியைச் செய்கின்றனர். இவர்களைத் தவிர நாம் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ள தவறிய ஒரு பிரிவினர் நம் சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல, சொந்த குடும்பத்தாலும் சமூகத்தாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் தான்.
இவர்களில் சிலர் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுவிட்டாலும், பெரும்பான்மையினரின் வாழ்க்கை ரயில்களிலும் பேருந்துகளிலும் யாசகம் பெறுவதிலே கழிகின்றது. பல்வேறு சோதனைகள் தொடர்ந்தாலும் இவ்வாறு யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த இவர்களை, கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உச்சக்கட்ட சோதனைக்குள்ளாக்கியுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வெளியே வருவதைத் தவிர்த்துவரும் நிலையில், பொதுமக்களை நம்பியிருக்கும் இவர்கள் தற்போது உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இதுகுறுத்து திருநங்கை ஒருவர் கூறுகையில், "ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்துவருகிறோம். யாரும் உதவி செய்ய முன்வருவதில்லை. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவும் அரசு ஏன் எங்களை கண்டுகொள்வதில்லை.
நாங்கள் என்ன தவறு செய்தோம். வெளியே சென்று யாசகம் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவைக் கொடுத்து உதவுங்கள். எங்கள் சமூகத்தில் முதியோர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரும் உள்ளார்கள். அவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்" என்றார்.
இருப்பினும், ஒன்டிட் என்ற தன்னார்வ அமைப்பு திருநங்கை சமூகத்திற்கு தொடர்ந்து உதவி செய்துவருகிறது. வீட்டுக்கே சென்று தேவையான பொருள்களை அளித்துவருகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பத்மஷாலி கூறுகையில், "நிலைமை கட்டுக்குள் வரும் வரை திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவம், உணவு ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.
திருநங்கை சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர்கள் நேரடியாகவே பாதிக்கப்படுகின்றனர். யாசகம், பாலியல் தொழிலை நம்பியே இச்சமூகம் உள்ளது. தினக்கூலிகளை போலவே அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் காற்றில் பறந்த மனிதாபிமானம்... எல்லையைத் திறக்காத கர்நாடகா; ஆம்புலன்ஸில் இருவர் உயிரிழப்பு!