உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ் இந்தியாவில் தன்னுடைய வருகையை ஆணித்தனமாக பதித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய,மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. முதல்கட்டமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பல மாநிலங்களில் தற்போது வைரஸ் பரவல் இருப்பது உறுதியாகிவருகிறது. அந்தவரிசையில், தெலங்கானாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே மாநில எல்லைகளை மூடியும், மாநிலத்த்தில் 144 தடை உத்தரவையும் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் பிறப்பித்திருந்தார். இருப்பினும் மக்கள் கரோனா வைரஸ் அச்சமின்றி சாலைகளில் ஹாயாக சுற்றித்திரிந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியாவில் எந்த மாநிலமும் அறிவிக்காத கடினமான முடிவை அசால்டாக அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது அத்தியாவசியத் தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டு அனைத்து மாநிலத்தினரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.
இந்தப் பரபரப்பு முடிவதற்குள், அடுத்த அறிவிப்பாக ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் கரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா அறிவிக்கப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சு கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் மாநிலங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்தாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி 74, 533 பேர் கண்காணிப்பு!