நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலையை வரவிருக்கும் குளிர்காலத்தில் தடுத்திட முடியாது என கரோனா தொற்றை எதிர்க்கொள்ளும் ஒருங்கிணைப்பு முயற்சிக்காக அரசால் அமைக்கப்பட்ட கரோனா தடுப்பு நிபுணர் குழுவின் தலைவரான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் கரோனா வைரசின் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. எனினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் 3 முதல் 4 யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தியா தற்போது நல்ல நிலையில் இருந்தாலும், 90 விழுக்காடு மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இன்னும் உள்ளன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் கரோனா பாதிப்புகள் மீண்டும் உயர கூடிய சூழலை காணமுடிகிறது. எனவே, இந்தியாவிலும் குளிர்காலத்தில் வரவிருக்கும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையை தடுத்திட முடியாது. நாம் இன்னும் வைரசை பற்றி கற்றறிந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம். கரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் கிடைத்தவுடன், அவற்றை வழங்க போதிய வளங்கள் உள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் நிச்சயம் விநியோகம் செய்திட முடியும். பண்டிகை காலத்தில் மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால், கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும். இந்தியா அடுத்த அலையில் கரோனாவால் பாதிக்கப்படுவது நமது கையில்தான் உள்ளது" எனத் தெரிவித்தார்