உலகை உலுக்கும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி பிரதமர் மோடி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் நிதி வழங்கிவருகின்றனர்.
அதையடுத்து சீன நிறுவனங்களான சாம்சங், எல்.ஜி. கரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்க முன்வந்துள்ளன. இதுகுறித்து எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா தலைமை இயக்குநர் யங் லக் கிம் கூறுகையில், எல்.ஜி. இந்தியாவானது, இந்திய அரசாங்கத்திற்கும் அதன் ஒவ்வொரு குடிமகனுக்கும் கரோனா பாதுகாப்பில் அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்க விரும்புகிறது.
அதன்படி, அக்ஷ்யா பத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து 10 லட்சம் புலம்பெயர்ந்த தினக்கூலி, சாலையோர மக்களுக்கு உணவளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் 50 மாநில மற்றும் மாவட்ட மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம், குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கண்டிஷ்னர்கள், டிவிக்கள் வழங்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.
அதேபோல் சாம்சங் இந்தியா மருத்துவமனைகளுக்கு வெப்பமானிகள், முகக் கவசங்கள், கையுறைகள், அறுவை சிகிச்சை உடைகள், மருத்துவர் கண் உறைகள், தொப்பிகள் உள்ளிட்டவைகள் வழங்க முன்வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உணவற்றோருக்கு உணவு வழங்க உள்ளதாகவும் அதற்கு காவல்துறை உதவியை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிதி: உண்டியல் பணம் ரூ.9000 வழங்கிய 5 வயது சிறுமி