திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில், வருகின்ற அக்டோபர் 19 முதல் அக்டோபர் 21 வரை மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து ஆய்வுசெய்ய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது திட்டமிடப்பட்ட வருகை பற்றிய விவரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
முதல் நாள் (அக்.19), டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை வழியாக மலப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இரண்டாம் நாள் (அக். 20), வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா வைரஸ் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில், திஷா கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
கடைசி நாளான (அக். 21) அன்று மனாந்தவாடியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனையை பார்வையிடுகிறார். அதன்பின் இறுதியாக கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்புவார்.
கேரளாவில் நேற்று (அக்.16) ஏழாயிரத்து 283 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளனர்.