டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றன.
அந்த வகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறியும் நோக்கில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தன. இதன் காரணமாக, ஜனவரி மாதத்தில் ஒரு கோடியாக இருந்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 9.32 கோடியாக அதிகரித்தது.
இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டு, பிறருக்கு பாதிப்பு ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு விழுக்காடாக குறைந்துள்ளது எனவும் இவை இறப்பு விகிதத்தை குறைக்க உதவியதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 212 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 68ஆக அதிகரித்தது. இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 998 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.