இந்தியாவில் கரோனா வைரஸால் இதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 543 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளித்துவருகின்றனர். இதனால் மருத்துவர்களுக்கும் வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக வதந்தி பரவிவருகிறது.
எனவே, மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவம் இந்தியாவில் தொடர்ந்துவருகிறது. அந்தவகையில், கடந்த 2ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவர்கள் மீது கல்வீசி தாக்குல் நடத்தினர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஜபல்புரிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நான்கு குற்றவாளிகளில் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, ஜபல்புரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் நேற்று மருத்துவக் கல்லூரியிலிருந்து தப்பிச் சென்றார். இதனால், அவரை பிடித்தத்தரும் நபருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச காவல் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நர்சிங்பூர் - ரைசன் எல்லையில் அவர் நேற்று நள்ளிரவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, அவர் மருத்துவக் கல்லூரியிலிருந்து தப்பிச் செல்லும்போது பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்த நான்கு காவலர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொல்கத்தாவில் மூன்று மருத்துவர்களுக்கு கரோனா!