டெல்லி: கோவிட்-19 தாக்கத்தினால், பெண் சிறைவாசிகளின் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் இருப்பு அளவை குறைக்கும் படி தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும், மருத்துவ வசதிகளை உடனடியாகக் கிடைக்கப்பெற வழிவகை செய்யவேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற ஆவண செய்யவேண்டும் என்று மகளிர் ஆணையம் சிறைத் துறை தலைமை அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளது.
சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக பிணை வழங்க தகுதியானவர்களுக்கு பிணை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மாநில சட்டத் துறை, மாவாட்ட நீதித் துறையும் பெண் கைதிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்? இருவர் கைது!
2018 கணக்கீட்டின் படி, இந்தியாவில் 19ஆயிரத்து 242 பெண் கைதிகளும், பெண்களுக்கென 20 தனி சிறைச்சாலைகளும் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பெண்கள் சிறைச்சாலையும், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 3 பெண்கள் சிறைச்சாலைகள் உள்ளன.
ஊரடங்கின் போது சிறைச்சாலைகளில் உள்ள சுகாதார சேவைகள், மருத்துவ பரிசோதனைகள், உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள் போன்ற நிபுணர்களின் சேவைகளை சிறைச்சாலையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய சிறைச்சாலைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், இது நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் பிணையளிக்க கூடிய சிறைவாசிகளுக்கு பிணை கொடுக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 11ஆயிரம் கைதிகளும், பஞ்சாபில் 6000 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் டெல்லி, மேற்கு வங்கத்திலும் தலா 3000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.