கரோனா வைரஸ் நோய் இந்தியாவை அச்சுறுத்திவருகிறது. இந்நோயால் நாடு முழுவதும் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 21 நாள்களுக்கு நாடு முடக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, கேரளாவில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் ஊதியமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த இரு நாள்களாக உணவின்றி தவித்து வருவதாகவும் தங்கள் மாநிலத்துக்குச் செல்ல விரும்புவதாகவும் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பணிபுரியும் தினக்கூலிகள் தெரிவித்துள்ளனர். சொந்த மாநிலத்துக்குச் செல்ல பேருந்து வசதிகள் வேண்டி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "தினக்கூலியான எங்களுக்கு இப்போது வேலையில்லை. பிறகு எப்படி பணம் கிடைக்கும். எங்கள் ஊருக்கு சென்று பெற்றோர்களுடன் தங்க விரும்புகிறோம். இங்கு பேசும் மொழியை கூட எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். உணவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் கூடுதலாக 19 பேருக்கு கரோனா: பினராயி அறிவிப்பு