கரோனா தொற்று அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு நீட், ஜே.இ.இ (முதன்மை) தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதிக்குள் ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகளையும், செப்டம்பர் 27ஆம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வையும் நடத்துவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு நிச்சயம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்வுகள் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போதே கரோனா தொற்று அச்சத்தைக் கருத்தில்கொண்டு கல்லூரி, பல்கலைகழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென எடுத்துரைத்தேன். தேர்வுகள் நடைபெற்றால் மாணவர்களின் நலன் மிகவும் மோசமடையும் எனவும் கூறினேன்.
கரோனா தொற்று நிலையைக் கருத்தில்கொண்டு நோய்த்தொற்றின் சிலை சீரடையும்வரை தேர்வுகள் நடத்தப்படுவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.
தற்போது வரும் செப்டம்பர் மாதம் நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நான் மீண்டும் மத்திய அரசை வேண்டுகிறேன். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நடத்தவிருக்கும் தேர்வுகளை அரசு ஒத்திவைக்க வேண்டும். இது மாணவர்களின் நலனைக் காக்கும் முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.