கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி சாலையில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்களுக்கு அறிவுறையும் காவல் துறையினர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்திலுள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய காவல் துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இல்லத்தின் வெளியே நின்று பூத்தூவி காவலர்களை கவுரவித்தனர். இதைச் சற்றும் ஏதிர்ப்பார்க்காத காவலர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் பிரதாப் கூறுகையில், "இதுபோன்று மக்கள் அதிகளவில் தரும் ஒத்துழைப்பு, காவலர்கள் சீரும் சிறப்புமாக பணியாற்ற உத்வேகம் தருகிறது" என்றார்.
இதையும் படிங்க: கோவிட்19 பாதிப்பிலிருந்து வயதானவர்களை காக்கும் வழிகள்!