நாட்டில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தற்போதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பினும், நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரு நாளில் இந்தியாவில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 903 ஆக அதிகரித்தது.
இதுகுறித்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (ஜூலை 3ஆம் தேதி) காலை நிலவரப்படி, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக உள்ளது. அவர்களில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 27 ஆயிரத்து 439 பேர் மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட முகாம் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 379 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 213ஆக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரத் துறை விவரங்களின்படி, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில், இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து, 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், 92 ஆயிரத்து 175 பாதிப்புகளுடன் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
நாட்டில் நேற்றுவரை, 92 லட்சத்து 97 ஆயிரத்து 749 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றிற்கான பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒருநாள் மட்டும் 2 லட்சத்து 41 ஆயிரத்து 576 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4000 பேருக்கு மேல் கரோனா' - அமைச்சர் விஜயபாஸ்கர்