உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இத்தொற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 62 பேர் கரோனா வைரஸால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 934ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களில் ஒரேநாளில் கரோனாவால் உயிரிழப்பது இதுவே அதிகமாகும்.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் புதிதாக 1,543 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 684 பேர் இத்தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 522 பேர் பாதிக்கப்பட்டதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் இதுவரை 8,590 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 369 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கரோனாவால் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இரண்டாம் இடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 247 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,548ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 394 பேர் குணமடைந்த நிலையில், 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் நேற்று 190 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதேசமயம் நேற்று ஒருநாளில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதனால், அம்மாநிலத்தில் இதுவரை 3,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர். 877 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு இப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,937 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,101 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கடனுதவி: ப. சிதம்பரம் வரவேற்பு