இந்தியாவில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று காற்றைவிட மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை.
இந்த நிலையில் நாட்டில் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் புதிதாக 47,704 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் இத்தொற்றால் நேற்று 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இறப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 425ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இப்பெருந்தொற்றிலிருந்து ஒன்பது லட்சத்து 52 ஆயிரத்து 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி நாட்டில் தற்போது நான்கு லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 944 பேர் குணமடைந்த நிலையில் 13 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.