இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒருபுறம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும், வைரஸ் பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை.
சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 34,956 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 687 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் கோவிட் -19 பாதிப்பு என்பது ஒன்பது லட்சத்தை தாண்டிய மூன்றே நாள்களில் பத்து லட்சத்தை கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போதுவரை 10,03,832 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 25,602 பேர் உயிரிழந்துள்ளனர்; 6,35,757 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 3,42,473 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அங்கு இதுவரை 2,84,281 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை்தொடர்ந்து தமிழ்நாட்டில் 1,56,369 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கான சிகிச்சைபெற்று வரும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 48 விழுக்காடு இவ்விரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![COVID-19 India tracker](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8056961_i.jpg)
இந்தியாவில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி கேரளாவில் கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மாதங்களில் (170 நாள்கள்) இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையிலும், ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் 63.25 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் மாயமான 2 ஆயிரம் கரோனா நோயாளிகள்!