நாட்டில் கடந்த ஜனவரி மாத இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா தீநுண்மி தொற்று தற்போது அதிதீவிரமாகப் பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த சில நாள்களாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7964 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 763ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் இதுவரை 62 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,098 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், தலைநகர் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 17 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 398 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 264 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 8,381 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நாட்டின் வரலாற்றுப் பிழைகளைத் திருத்திய நரேந்திர மோடி!'