இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமான நிலையை எட்டிவருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டத் தகவலின் படி, நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 3 ஆயிரத்து 525 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1026 பேரும், தமிழ்நாட்டில் 716 பேரும், டெல்லியில் 406 பேரும், குஜராத்தில் 362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54 பேரும், குஜராத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 1,931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆயிரத்து 386ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 24 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 921 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்தில் 8ஆயிரத்து 903 பாதிப்புகளும், 537 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: சுமார் 1 லட்சத்து 69 ஆயிரம் பயணிகள் முன்பதிவு - இந்தியன் ரயில்வே அறிவிப்பு