ஆன்டிஜென் சோதனையின் மூலம் கோவிட் -19 பரிசோதனையை மேற்கொள்ளும் அனைத்து அரசு மற்றும் தனியார் மையங்களை கண்டறிந்து ஒப்புதல் அளிக்குமாறு, அலுவலர்களிடம் ஐ.சி.எம்.ஆர் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐசிஎம்ஆரின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்க்கவா அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆன்டிஜென் சோதனைகளின் புள்ளிகளை ஆர்டி-பி.சி.ஆர் வசதியுடன் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கரோனா அறிகுறியுடன் தொற்று இல்லை என வரும் முடிவுகள் மீண்டும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் பரிசோதிக்கப்பட வேண்டும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய ஆன்டிஜென் சோதனை உதவும்.
இதுபோன்ற அனைத்து சோதனைகளின் தரவுகளையும், ஐசிஎம்ஆர் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டியது அவசியமாகும். அப்படி செய்வதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அல்லது தனிமைப்படுத்த மாவட்ட, நகராட்சி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 17) காலை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கரோனா வைரஸால் 10 லட்சத்து மூன்று ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ள நிலையில், 25 ஆயிரத்து 602 பேர் உயிரிழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.