நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில்தான் அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன. வரும் நாள்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதால், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
அதன்படி, இன்று மும்பையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வகம், ஆறு கரோனா பராமரிப்பு மையங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "ஆக்ஸிஜன் உருளைகளின் விநியோகம் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு மூலம் செய்யப்படும். 80 விழுக்காடு ஆக்ஸிஜன் உருளை 80 விழுக்காடு மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ளவை தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படும்.
மருத்துவமனையில் தங்களின் வசதியைப் பொறுத்தும், நோயாளிகள் வருவதைக் கணக்கிட்டும் அதற்கேற்ப ஆக்ஸிஜன் சிலிண்டரை வாங்கிக்கொள்ள வேண்டும்.
சிறப்பான மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். முடிந்தவரை அனைவரும் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமிநாசினி உபயோகித்து கைகளை சுத்தம்செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.