சீனாவில் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவையும் விட்டுவைக்காத கரோனாவிற்கு இதுவரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் நாளை (மார்ச் 22) மக்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம். அப்படியே கூட வேண்டிய தேவை ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 20 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
தற்போது கட்டுப்பாடுகளை அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்தப் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளோம். காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டாம். வீடுகளிலேயே தங்கியிருங்கள். நம்முடைய பாதுகாப்பு மட்டுமின்றி பிறரின் பாதுகாப்பு கருதியும் இந்தச் சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், நாளை ஊரடங்கு உத்தரவினால் டெல்லி மெட்ரோ ரயில்கள் இயங்காது. குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகிக்கு எதிராக வழக்கு!