இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1,600 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,835 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் 6,184 பேர் குணமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்றால் இதுவரை 111 வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்; 18 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்; இருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் பஞ்சாப், கர்நாடக தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 872 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 342 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 151 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 103 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர தலைநகர் டெல்லியில் 54 பேரும் தமிழ்நாட்டில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அம்மாநிலத்தில் இதுவரை 8,068 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து குஜராத் (3301), டெல்லி (2918), ராஜஸ்தான் (2185), மத்தியப் பிரதேசம் (2096) தமிழ்நாடு (1885) ஆகியவை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சரக்கு விமானத்தில் கொல்கத்தா பயணமா? - பிரசாந்த் கிஷோர் விளக்கம்