இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,687 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து பரிந்துரைகளை வழங்க 11 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவை மகாராஷ்டிர அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் திட்டமிடல் துறை தலைமைச் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர், வேளாண் துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு ஏப்ரல் 30ஆம் தேதி தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கவுள்ளது.
முன்னதாகக் கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் ஏழு பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏப்ரல் 20க்கு பின் எவ்வாறு இயங்க வேண்டும்? உள்துறை அமைச்சகம் அறிக்கை