கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருகட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள், தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தும் 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை கரோனா அச்சம் காரணமாக மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. கரோனா அச்சம் விலகிய பின்பு மீண்டும் புதிதாகத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதேபோல் ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ தேர்வுகளும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10, 12 ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 169 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இந்தக் கொடிய வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு மையம் கிருமி நாசினி தெளித்து சுத்தம்