உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இவர் பதவியேற்ற பிறகு, மக்கள் குறைகளைக் கண்டறிவதற்காகப் கடந்த ஆண்டு 'சி.எம் ஹெல்ப்லைன் சேவை 1076' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்தத் திட்டத்தின் மூலமாக, மக்கள் தங்கள் குறைகளை தொலைப்பேசி மூலமாகத் தெரியப்படுத்தலாம். முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் 24 மணி நேரமும் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது.
ஏற்கனவே இங்கு இணையதளம் மூலம் மக்கள் தங்கள் குறைகளை தெரியப்படுத்தலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தத் தெரியாதவர்கள் எவ்வாறு குறைகளை தெரியப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்ததால், ஹெல்ப்லைன் சேவை என்ற இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இங்கு பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனைத்தொடர்ந்து மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது இங்கு பணிபுரியும் 80 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், ”கரோனா பரவலின்போது இந்தச் சேவை மையம் தொடர்ந்து செயல்பட்டுவந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் அங்கு சென்று அலுவலகத்தில் தகுந்த இடைவேளி பின்பற்றப்பட வேண்டும், முகக்கவசங்கள், கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கினோம். அதனைத்தொடர்ந்து ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிவதுபோல் புகைப்படங்கள், காணொலிகளை எங்களுக்கு அனுப்பினர். இருப்பினும், எவ்வாறு அங்கு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் 30 மணி நேரம் உயிருக்குப் போராடிய பெண்!