இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான பரிசோதனைகள் தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த மருந்தின் முதலாம் கட்ட பரிசோதனையில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது என்றும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலாம்கட்ட சோதனையானது 375 தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்டது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டு அறிக்கையின்படி, "தடுப்பூசி சோதனையில் சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டது. தற்போது, அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி அவர்களது உடலில் அதிகரித்துள்ளது.
பக்கவிளைவுகள் யாருக்கும் ஏற்படவில்லை. ஒரு தன்னார்வலருக்கு மட்டுமே சில பாதிப்புகள் கண்டறியப்பட்டது. ஆனால், அவரின் உடல்நிலை பாதிப்பிற்கும் தடுப்பூசி மருந்துக்கும் தொடர்பு இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு மிகக் குறைவானவர்களே விண்ணப்பம்
கோவாக்சின் தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனைக்கு 100 தன்னார்வர்கள் தேவை என அறிவித்தபோது, 4500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன்பின் 2ஆம் கட்ட பரிசோதனைக்கு 50 பேர் தேவை என்ற நிலையில் 4000 பேர் விருப்பம் தெரிவித்து அனுப்பியிருந்த விண்ணப்பங்களை நாங்கள் பெற்றோம்.
ஆனால், 3ஆம் கட்ட பரிசோதனைக்கு 1500 முதல் 2000 பேர் வரை தேவை என்ற நிலையில் 200 பேர் மட்டுமே விண்ணப்பத்துள்ளனர். கரோனா தடுப்பூசி மிக விரைவில் ஒவ்வொருவருக்கும் வர இருக்கும் நிலையில், ஏன் தன்னார்வலராகச் செல்ல வேண்டும் என மக்கள் நினைப்பதாக எய்ம்ஸ் மருத்துவர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.