ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை உருவாக்கியுள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எலா, உருமாற்றம் அடைந்துள்ள கரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் செயலாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒருங்கிணைந்த மெய்நிகர் கூட்டத்தில் (virtual programme) கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான அவசர உரிமத்திற்கான அனுமதி கோரி மருந்து ஒழுங்குமுறை அலுவலர்களை அணுகியுள்ளதாகவும், கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளுக்குள்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணா எலா கூறியுள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் நிறைய உருமாற்றம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இரண்டு கருதுகோள்களின் அடிப்படையில் உருமாற்றம் அடையும் வைரசிடமிருந்து பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பிரிட்டனில் வைரஸ் உருமாறியது குறித்துப் பேசிய அவர், உருமாற்றம் என்பது எதிர்பார்க்காத ஒன்று அல்ல என்றும் வைரஸ் உயிரற்றது என்பதால், அது தனக்குள்ளே உருமாற்றம் அடையும் என்றும் அவர் பேசுகையில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மூக்கில் செலுத்தக்கூடிய கரோனா தடுப்புமருந்து - பாரத் பயோடெக் இயக்குநர் தகவல்