புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது, ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அர்தோணியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (43). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கல்லூரி, பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நெப்போலியன் தனது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளார்.
மேலும், பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்களையும் தனது வீட்டில் மூட்டை மூட்டையாகச் சேமித்துவைத்திருந்தார். இதனிடையே இன்று (செப். 28) நெப்போலியன் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் உள்ளே இருந்த தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் நடைபெற்றபோது நெப்போலியனின் இரண்டு மகள்களும் வெளியே சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியாங்குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!