புதுச்சேரியின் காரைக்கால் எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மூதாட்டி செங்கோல்மேரி (66). இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள் அனுப்பும் பணத்தை சேமித்து 21 பவுன் தங்க நகையை வாங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், மூதாட்டியின் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் நகைகளைப் பத்திரமாக லாக்கரில் வைப்பதாகவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஸ்வரி, அவரது கணவர் மாரியப்பன் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கி லாக்கரில் உள்ள நகைகளை பாா்க்க விரும்புவதாக மூதாட்டி கூறவே, அவர்கள் தடுமாறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மூதாட்டி செங்கோல்மேரி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கணவன், மனைவி இருவரும் மூதாட்டியின் நகைகளை எஸ்பிஐ வங்கியில் அடமானம் வைத்து அந்த பணத்தில் வீட்டு மனை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அடமானம் வைத்த நகை மற்றும் மனையின் பத்திரத்தை பறிமுதல் செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். தற்போது, புதுச்சேரி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூவர் கைது - 75 கிலோ கஞ்சா பறிமுதல்!