பிகார் மாநிலத்தின் ஜே.டி.யூ தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியை காணவுள்ளது. மத்தியில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்துவந்து, அண்மையில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து களம் காண்கின்றது.
சிராக் பாஸ்வானின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் அவரது கட்சித் தொண்டர்களையும், கணிசமான அளவு பொதுமக்களையும் ஈர்த்துள்ளதாக அறிய முடிகிறது.
இன்று (அக்டோபர் 26) பக்ஸாரின் டும்ரான் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர்," எங்கள் கட்சியின் சார்பில் பிகார் மக்களுக்கு நாங்கள் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நடைபெற்ற அத்தனை ஊழல் முறைகேடுகளை குறித்தும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்போம் என உறுதியாக கூறுகிறேன். ஊழல் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் ரூ .1.25 லட்சம் கோடி சிறப்பு தொகுப்புக்கு போட்டியாக பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் சாத் நிஷ்சே திட்டத்தை அறிவித்தார்.
ரூ .2.7 லட்சம் கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட 'சாத் நிஷ்சே' (ஏழு தீர்வுகள்) திட்டத்தில் நடந்துள்ள இமாலய ஊழல் குறித்து அவர் எப்போது வாய்த்திறப்பார் என தெரியவில்லை ?.
மின்சார இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, கழிப்பறைகள், குடிநீர் குழாய் அமைத்தல், சாலைகள் அமைப்பது என அந்த திட்டத்தில் நடைபெற்ற அனைத்து பணிகளிலும் ஊழல் தலைவிரித்தாடியுள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாரை ஊழல் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்.
பெரிய அளவில் நடைபெற்ற இந்த ஊழல் முறைகேடுகளில் அவரும் ஈடுபட்டுள்ளார். இல்லையென்றால், அது அடுத்து வெற்றிபெற்று அரியணை ஏறும் எங்கள் ஆட்சியில் நடைபெறவுள்ள விசாரணையில் தெளிவாகும்.
எல்.ஜே.பி ஆட்சிக்கு வரும்போது இந்த ஊழல்கள் விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள், அது முதலமைச்சராக இருந்தாலும் அல்லது உயர் அலுவலராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
முழுமையான மது விலக்கு மாநிலத்தில் அமலில் உள்ளது. இருப்பினும், அனைவருக்கும் தங்கு தடையின்றி மதுபானம் கிடைக்கிறது. அவை எப்படி கிடைக்கிறது என தெரியவில்லை.
அரசும் நிர்வாகமும் ஒன்றிணைந்து மது விநியோகத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன. இது பற்றி தெரியாத ஒரு அமைச்சரும் இல்லை. அவர் அதை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. காரணம் அவரே இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளி" என்றார்.