இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் இருக்கிறது. நாட்டில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கிக் கொண்டிருந்தபோதுதான் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மேலும், வைரஸ் பரவல் தீவிரமடைந்து கொண்டிருந்தபோதும் மத்தியப் பிரதேசத்தில் சுகாதாரத் துறைக்கென்று தனியாக அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது. இறுதியில், நரோட்டம் மிஸ்ரா சுகாதாரத் துறை அமைச்சராகக் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். கமல்நாத் தலைமையிலான அரசிலும் இவர்தான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் தரவுகளைப் பார்க்கும்போது நிலைமை கைகளை மீறிச் சென்றுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இந்தூரில் மட்டும் நேற்று ஒரேநாளில் 84 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்நகரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,029ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை இந்தூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் பிரவீன் ஜாடியா உறுதிசெய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உறுதிசெய்யப்பட்ட கோவிட்-19 தொற்றுகளில் பாதிப்பு அதிகம் இந்தூரில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 1,695 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 148 பேர் குணமடைந்துள்ளனர், 81 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மொத்த இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்க முடியாது - மத்திய அமைச்சர்