உத்தரப் பிரதேசம் அலகாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து 57 வயதான கரோனா நோயாளி ஒருவர் நேற்று வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து 500 மீ தொலைவில் உள்ள புதரிலிருந்து மீட்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மருத்துவமனையில் பணிபுரிந்த அலுவலர்கள் தொல்லை கொடுத்த காரணத்தால் அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என நோயாளியின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
ஜூலை 24ஆம் தேதி, கரோனா அறிகுறிகள் அவரிடம் தென்பட்ட காரணத்தால் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர். சுவாச பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து தப்பிப்பதற்கு முன்பு தனக்கு ஒழுங்கான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
'வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள சிலரிடம் உதவி கேட்டுள்ளேன். ஆனால், என்னை யாரும் கவனிக்கவில்லை' என அவர் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். இந்த உரையாடலை ஆடியோவாக பதிவு செய்த குடும்பத்தார் அதனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் எஸ்.பி. சிங் கூறுகையில், "நோயாளிக்கு காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு இருந்துள்ளது. சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை மேம்பட்டது. ஆனால், திடீரென அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை தடுத்து நிறுத்த மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், நடப்பது என்ன என மற்றவர்களுக்கு தெரிவதற்குள் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார். உடனடியாக காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்தோம்" என்றார்.
நோயாளி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரத்தம் இன்றித் தவிக்கும் ஜிப்மர் மருத்துவமனை!