கரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை மக்களிடையே விதைக்கும் விதமாக, கேரள மாநில காவலர்கள் விழிப்புணர்வு காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த விழிப்புணர்வு வீடியோ மாநில காவல்துறை ஊடக மையத்தின் சார்பில் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
அந்தக் காணொலியில் தோன்றும் காவலர்கள், முகக் கவசம் அணிந்தப்படி நாட்டுப்புறப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகின்றனர். அத்துடன் கைகளைக் கழுவிப் பத்திரமாக இருங்கள். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வையும் விதைக்கின்றனர்.
இந்தக் காணொலி காட்சி பதிவேற்றம் செய்யப்பட்ட உடனே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு, 35 ஆயிரத்தைத் தாண்டிய பகிர்வுகள் என காணொலி காட்சியின் விழிப்புணர்வு தொடர்கிறது.
இதுமட்டுமின்றி அந்த காணொலிக் காட்சியை பதிவேற்றம் செய்தும் மக்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். கேரள காவல்துறையின் இந்த விழிப்புணர்வு பதிவு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
உலகில் கரோனா வைரஸ் தொற்றுத் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளாவைப் பொறுத்தமட்டில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு தொற்று உள்ளது.