கேரளாவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் விசாரித்தார்.
அப்போது மாநில அரசின் முடிவுக்கு இரு மாதங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக மாநில அரசாங்கம், அரசு ஊழியர்களின் சம்பளக் குறைப்பு விவகாரத்தில், “ஒவ்வொரு மாதமும் ஆறு நாள்களுக்கு மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஐந்து மாதங்களுக்கு கழிக்கப்படும்” என்று கூறியிருந்தது.
இது, “மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், மாதத்திற்கு ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என்றும் மாநில அரசு தெளிவுப்படுத்தியிருந்தது.
கேரளாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ), மாநில வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் ஓராண்டு வரை 30 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள இழப்பை சரிகட்டும் வகையில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!