சீனாவின் வூஹான் நகரில் முதலில் பரவத்தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்று தற்போது இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. இதைத் தடுக்க சர்வதேச நாடுகள பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 350ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் (மார்ச் 15) நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 37 பேருக்கும் விக்டோரியா மாகாணத்தில் 13 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு கப்பல்களுக்கும் ஆஸ்திரேலிய துறை முகங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலிருந்து அனுமதியின்றி வெளியேறினால், அது தண்டனைக்குறிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திலேயாவில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முறையான அனுமதி இல்லாமல் ஒரு இடத்தில் 500 பேருக்கு மேல் கூடினால், அது தண்டனைக்குறிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்!