அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “நாட்டின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட பூட்டுதலை (லாக்டவுன்) உறுதி செய்வதில் காவல்துறை ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் காவல்துறை பெரும் சேவை செய்கிறது. இவ்வாறான முன்மாதிரியான பணிகளின் மூலம் மாநில காவல் துறை மக்கள் மனங்களை வென்றுள்ளது. அந்த வகையில் கோவிட்-19 வைரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காவல் துறை ஊழியர்கள் மற்றும் பிற அசாம் அரசு ஊழியர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை திட்டம் கிடைக்கும்” என்றார்.
முன்னதாக முதலமைச்சர் சோனாவால் காவல் துறை அதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது சமூக வலைதளங்களில் வதந்திகளைத் தடுக்க காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையையும் அவர் பாராட்டினார்.
அசாம் மாநிலத்தில் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதாக இதுவரை 446 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,074 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 53 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு 4,293 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.