கரோனா தொற்று காரணமாக பிரதமர் மோடி தேசிய ஊரடங்கு பிறத்துள்ள நிலையில், அதனை செயல்படுத்திய விதம் பலரை பாதித்துள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் இதனை செயல்படுத்தியது முக்கியமான குறைபாடு, இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து வசதியில்லாமல் தங்கள் ஊர்களுக்கு பயணிக்கும் இவர்கள், மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
ஏழைகளின் நிலை குறித்தும் அரசாங்கம் சிந்திக்கத் தவறியுள்ளது. மூன்று வார கால தேசிய அளவு முடக்கத்தை ஏழைகள் எப்படி சமாளிப்பார்கள். தேசிய அளவு முடக்கத்துக்குப் பிறகாவது அவர்களின் அவல நிலையைப் போக்க அரசாங்கம் வழிவகை செய்திருக்க வேண்டும். தேசிய அளவு முடக்கத்துக்கு முன்பு ஏழைகளை பாதுகாப்பது குறித்து திட்டம் தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் திட்டம் தீட்டாமல் உடனடியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதேபோல் தொழிற்சாலைகளை மூடுவதிலும் சரியான திட்டம் வகுக்கப்படவில்லை. கரோனா வைரசுக்கு எதிராக போராட வேண்டிய சூழலில், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கேள்வி கேட்பாரின்றி மூடப்பட்டது.
தனிமைப்படுத்துதல் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பதற்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. ஊரடங்கை செயல்படுத்துவதில் குறைபாடு இருந்தாலும், இந்தியாவில் அது கரோனா பரவலை குறைத்துள்ளது. ஆனால் இந்த மூன்று வார முடக்கம், கரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இந்த தேசிய அளவு முடக்கம் நமக்கு அளித்துள்ள நேரத்தில், கரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், மருத்துவ சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை செய்வது சாத்தியமல்ல, கரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கூட வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அவர்கள்தான் கரோனாவுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்கும் வீரர்கள். ஆனால் இங்கு சில சுகாதாரப் பணியாளர்களுக்கே முகக்கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவு முடக்கத்தால் ஏழைகளின் அவலநிலை:
இந்த தேசிய அளவு முடக்கத்தால், ஏழைகள் மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஏழைகள் சுகாதாரமற்ற சூழலில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவர்களிடம் பணம் இருக்காது. தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்கள், கரோனா பரிசோதனைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கான மருத்துவ செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும். இது நோய்க்கான அறிகுறி தெரியும் ஏழை மக்களை பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கும் விதமாக அமையும். அவர்களின் இறுக்கமான வாழ்வியல் சூழலில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் சாத்தியமற்ற ஒன்று, இதற்கு அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் மருத்துவ வசதிகளை பகிர்ந்து அளிக்கின்றன. குறைவான மருத்துவமனை வசதிகள் உள்ள நிலையில், இத்தாலியில் உள்ள டாக்டர்கள் சிகிச்சையில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவு எடுக்கின்றனர். அதிக ஆண்டுகள் வாழக்கூடிய இளைஞர்கள், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நோயாளிகளுக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இதுபோன்ற சூழலை நினைத்துப் பாருங்கள், 75 வயது பணக்காரர் மீதிருக்கும் அக்கறை 30 வயது ஏழை மீது இருப்பதில்லை. பணக்கார முதியவருக்கே சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த சூழலைத் தவிர்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்கள் சில விதிமுறைகளை வகுக்க வேண்டும். இது அழுத்தத்தில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மருத்துவ வசதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அதிலும் ஏழைகளே கடைசி வரிசையில் இருக்கின்றனர். பணத்தைப் பார்த்து எந்த நோயாளியை வென்டிலேட்டரில் வைக்க வேண்டும் என முடிவு செய்யும் மருத்துவர்களும், மருத்துவ நிர்வாகங்களும் இந்த மூன்று வார முடக்கத்தை சரியான விதிமுறைகளை வகுக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
எழுதியவர்: பிரியரஞ்சன் ஜா - பொருளாதார பேராசிரியர்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா
இதையும் படிங்க: கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்!