கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வு, கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துவந்தது ஆகியவற்றை கருத்தில்கொண்டு, புதுச்சேரியில் கடந்த 8ஆம்தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதனால், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நோய்த்தோற்று ஏற்பட்டுள்ளது. மண்ணாடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாதானூரில் மாணவர் ஒருவருக்கு நேற்று நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், வகுப்புகள் அனைத்தும் மூடப்பட்டு மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது.
இதனையறிந்து அங்கு சென்ற மண்ணாடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செல்வம் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் படி வலியுறுத்தினார். அப்போது, மாணவர்களுக்கு மருத்துவக்குழு வந்து பரிசோதனை செய்து, தொற்று அறிகுறி உள்ள ஆ மாணவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, உயர் அலுவலர்களை தொடர்பு கொண்ட நிலையில், யாரும் சரிவர பதிலளிக்காததால், தாமே முன்வந்து பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். தனது தொகுதி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் எச்சரித்துள்ளார்.