புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனைகள் செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்புற நலவாழ்வு மையம் சார்பில் புதுச்சேரி நகரப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள மதுபான கடைகள் மற்றும் பார்களில் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நீட நடராஜர் வீதியில் மதுபான கடைக்குச் சென்று மருத்துவக் குழுவினர் கடைக்கு வந்த குடிமகன்களை அழைத்து கரோனா பரிசோதனை செய்தனர்.
அவர்களில் சில குடிமகன்கள் மருத்துவக் குழுவினரை பார்த்ததும் மதுபானங்களை வாங்கிக்கொண்டு தப்பி ஓடினர். சிலர் நான் ஏற்கெனவே பரிசோதனை செய்துவிட்டேன் எனக் கூறி அங்கிருந்து நழுவினர். பின்னர் மதுபானக் கடை ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதேபோல், காந்தி வீதியில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.