கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறவும், பொதுஇடங்களில் கூடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
மே 3ஆம் தேதிக்கு பின் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பினும், உணவகங்கள் தற்போதுவரை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. அதிலும் அமர்ந்து உண்ணக்கூடிய வகையிலான உணவகங்களுக்கு தற்போதுவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமலே உள்ளன.
இதன் காரணமாக 90 விழுக்காடு வரை வருவாயை முற்றிலும் இழந்துள்ளனர் உணவக உரிமையாளர்கள்.
இந்தியாவில் செயல்படும் உணவகங்களில் 35 விழுக்காடு அமர்ந்து உண்ணும் வகையிலான உணவகங்கள் தான். இவ்வகையான உணவகங்களின் 2019ஆம் ஆண்டின் வருவாய் 4.2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்து உண்ணும் உணவகங்கள் செயல்பட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமும், பார்சல் வழங்கியும் சில உணவகங்கள் செயல்பட்டுவந்தன. இதனை வைத்து தங்கள் வருவாய் இழப்பினை ஓரளவுக்கு ஈடுசெய்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த உணவகங்கள் அனைத்தும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மார்ச் 13, 14ஆம் தேதிகளிலேயே மூடப்பட்டன. குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தனியார் புள்ளியியல் நிறுவனம், ஊரடங்கு உத்தரவினால் அமர்ந்து உண்ணும் வகையிலான உணவகங்கள் தங்களது 90 விழுக்காடு வருவாயினை இழந்துள்ளது. குளிரூட்டும் வசதி கொண்ட அமர்ந்து உண்ணும் உணவகங்கள், நட்சத்திர வசதி கொண்ட உணவகங்கள் பெரும்பாலானவை இயங்க தற்போதுவரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் கடைகளை செயல்படுத்த எண்ணினாலும் 50 முதல் 70 விழுக்காடு ஆர்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்டால் மீண்டும் உணவகங்களில் வருவாய் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, தேசி்ய தலைநகர் பகுதி போன்றவை 30 விழுக்காட்டிற்கும் மேலாக சிவப்பு மண்டலங்களாக உள்ளன. அந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்தாலோ, தகுந்த இடைவெளிகளைக் கடைபிடித்து உணவருந்த அனுமதியளித்தாலோ 45 நாட்களில் அமர்ந்துண்ணும் உணவகங்கள் 30 விழுக்காடு வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது.
ஊரடங்கின் காரணமாக உணவகங்கள் செயல்படாமல் இருப்பதினால் உணவக ஊழியர்கள் மட்டுமின்றி, விவசாயிகள், ஆன்லைன் செயலி மூலம் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள், பகுதி நேரத்தில் உணவு விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தாரர்கள் உள்ளிட்டோரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவின் நடப்பு நிதியாண்டில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அம்மா உணவகம்' போன்று மகாராஷ்டிராவில் குறைந்த விலை உணவு மையம்!