உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில், மேலும் 44 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக கர்னூல் மாவட்டத்தில் 26 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் ஆறு பேரும், வடக்கு கோதாவரி மாவட்டத்தில் ஐந்து பேரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, 565 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், இதில் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நபர்கள் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: ஒரே மருத்துவமனையில் 31 செவிலியர், 5 மருத்துவர்களுக்கு கரோனா?