பாடபுத்தகங்களை மறுவரையறை செய்வதற்காக ராஜஸ்தான் கல்வித்துறை புதிய கமிட்டி ஒன்றினை அமைத்திருந்தது. இந்த கமிட்டி பாடப்புத்தகங்களில் உள்ள பல்வேறு தகவல்களை திருத்தம் செய்தது. அதில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் சாவர்க்கர் குறித்த தகவல்களை திருத்தம் செய்ததும், பாஜக தலைமையிலான அரசு கடந்த ஆட்சியில் சாவர்க்கர் குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் சேர்த்தது. அதில் திருத்தம் செய்த தற்போதைய கமிட்டி சாவர்க்கர் போர்ச்சுக்கலின் மைந்தன் என்று குறிப்பிட்டுள்ளது. 1910-11ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களின்படி இந்த தகவல் குறிப்பிட்டுள்ளதாக அதில் உள்ளது. வீர் சாவர்க்கர் என்று இருந்ததில் வீர் என்பது நீக்கப்பட்டுவிட்டது.
இந்த திருந்தங்களுக்கு ராஜஸ்தான் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்வானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி சாவர்க்கரை தேசப்பற்று கொண்டவராக ஏற்றுக்கொண்டதாகவும், அவர் குறித்து ஆவணப்படம் எடுக்க தன்னுடைய சொந்தப்பணம் ரூ. 11 ஆயிரத்தை கொடுத்ததாகவும் வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுதந்திர போராட்ட வீரரை போர்ச்சுக்கலின் மைந்தன் என அழைப்பது அவரை அவமதிக்கும் செயல் என்று அவர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாசரா, 'நான் என்ன சொல்ல முடியும்.? ஆய்வாளர்களின் கமிட்டி அளித்த பரிந்துரையின்படிதான் அந்த தகவல் இடம்பெற்றுள்ளது. கல்வியாளர்களின் பரிந்துரையின்படிதான் அந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது என்பதைதான் என்னால் சொல்லமுடியும்' எனக் கூறியுள்ளார். சாவர்க்கர் குறித்த இந்த தகவலுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சிலர் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.