மத்தியப் பிரதேசத்தில் உள்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டிய நிலையில் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகினார். அவருடன் 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியைவிட்டு விலகியதால் ஆளும் காங்கிரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத், மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் போபால் சென்று ஆட்சியைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து நேற்று (மார்ச்10) கருத்து தெரிவித்த கமல்நாத், “ஒன்றும் குழப்பமில்லை, கவலை வேண்டாம். சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் நிரூபிக்கப்பட்டு அரசு ஐந்து ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யும்” என்று கூறினார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், “பாஜக குதிரைபேரத்தில் (சட்டப்பேரவை உறுப்பினர்களை வாங்க பண பேரம்) ஈடுபடுகிறது” என்று குற்றஞ்சாட்டினார். முன்னதாக சோனியா காந்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலுடனும் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் தொடரும் நாடகம்: 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா!