உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி - ரே பரேலி நெடுஞ்சாலையான என்.எச்-330 பகுதியில் அரசின் பல்வேறு திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்த அளவில் வெவ்வேறு விகிதங்களில் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கலந்தாலோசிக்க உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு அயோத்தியிலுள்ள விவசாயிகளை சந்திக்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர், பாரபங்கி பகுதியில் மாநில அரசால் தடுத்து நிறுத்தப்பட்டார். இவ்வாறு அவர், கடந்த ஆறு மாதங்களில் 25ஆவது முறையாக தடுத்து நிறுத்தப்படுகிறார். முன்னதாக தலித் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டபோது அவரது குடும்பத்தைக் காணச் சென்றது உள்ளிட்ட பல நேரங்களிலும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “மாநில அரசு என் மீது ஆயிரம் வழக்குகளைத் தொடர்ந்தாலும், அறைந்தாலும் நான் தொடர்ந்து போராடுவேன்.
எங்கள் போராட்டம் ஏழைகள், பலவீனமான பிரிவினர், நலிந்தவர்களுக்கானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் ஒருபோதும் பாதிக்கப்படாது" என்றார்.