பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. சந்தீப் சிங்க் தயாரிப்பில் உருவாகிருக்கும் இந்த படத்தை ஒமங் குமார் இயக்கியுள்ளார். மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரீலிஸ் தேதி திடீரென ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சிக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத்தலைவர் கபில் சிபல் கூறுகையில்,
"தேர்தலில் கூடுதல் திறன் பெறுவதற்கு மட்டும்தான் இந்த படம். அரசியல் பின்னணியில் ஒரு குறிக்கோளோடு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். நடிகர் விவேக் ஓபராயும் பாஜகவைச் சேர்ந்தவர்தான்.
அரசியல் ரீதியாக ஆதாயத்தை பெற்றுக்கொள்வதே இதன் முழு நோக்கம். இது அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட படமே தவிர, கலைத்துறை ரீதியாக உருவாக்கப்பட்டது அல்ல. இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் 324 வது விதியை மீறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" எனப் பேசினார்.