காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் கரோனா பாதிப்பின் காரணமாக நிலவிவரும் அசாதாரண சூழல் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கரோனா வைரஸ் மக்களிடையே இருக்கும் என்ற சூழலில் அரசுக்கு லாக்டவுனில் இருந்து வெளியேற முறையான திட்டம் ஏதும் இல்லை.
பொருளாதாரம் 5 விழுக்காடு வரை வீழ்ச்சி அடையும் என்ற எச்சரிக்கை வெளியானாலும் அரசிடம் அதற்கான முன்னேற்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குடிபெயர்ந்த தொழிலாளர் நடைபயணமாக சொந்த ஊருக்குச் செல்லும் அவல நிலை ஒருபுறமிருக்க, சமூகத்தில் அடிதட்டு நிலையில் உள்ள 13 கோடி குடும்பத்தினர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நமது கோரிக்கை எதுவும் அரசின் செவிகளுக்கு எட்டுவதாக இல்லை. ஆனால், பொதுத்துறை நிறுவன விற்பனை, தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் என விபரீத முடிவுகள் எந்தவித ஆலோசனையுமின்றி எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகௌடா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆம்பன் புயல் நிவாரணமாக மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடி!