கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அமைப்புசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் அத்தியாவசிய பொருள்களை மக்களுக்கு வழங்கிவருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திர சிங் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நோக்கி, "யார் சிறந்தவர் மோடியா? அசோக் கெலாட்டா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அப்பெண் மோடி சிறந்தவர் என்று கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ராஜேந்திர சிங், "விளக்குகளை ஏற்றச் சொன்ன மோடியா சிறந்தவர்? அப்படி என்றால் அத்தியாவசிய பொருள்களை இங்கேயே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விளக்கை ஏற்று" என்று கோபமாகக் கூறியுள்ளார்.
ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும் பல முறை முயன்றும் ராஜேந்திர சிங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கன்னடத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா, "தங்களை ஆதரிக்காத நபர்களைக் காங்கிரஸ் அரசு தண்டிக்கும் என்பது இந்த சட்டப்பேரவை உறுப்பினரின் நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பஞ்சாபில் ஊரடங்கு தளர்வு?... முதலமைச்சர் விளக்கம்