கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், மத்திய அரசு இதை கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு (2018) பாஜகவின் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று (பிப்.11) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
அந்த உண்ணாவிரதத்தில், தெலுங்குதேச கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், சமூக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுடன் காந்தி சமாதிக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
போராட்டக்காரர்கள் ஏற்கனவே ஆந்திர மாநிலத்திலிருந்து டெல்லி தலைநகருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதற்காக ஆந்திர அரசு மக்கள் டெல்லிக்கு செல்வதற்காக இரண்டு இலவச சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாளை (பிப்.12) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, மனு அளிக்கவுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் சந்திரபாபு தொடங்கிய நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுலும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா, மாஜித் மேனன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாஜகவின் தலைவர் ராம் சந்திர ராவ் ஆந்திர முதலமைச்சர் இந்த போராட்டத்திற்கு முறையான அனுமதியைப் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து பேசியதாவது:
சந்திரபாபு நாயுடு தனது அரசியலுக்காகவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். எந்த நெறிமுறைகளும் இல்லாமல், அவர் டெல்லிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே பல பிரச்னைகள் மூலம் மிகவும் பிரபலமானவர்.
ஆந்திர மற்றும் தெலுங்கு இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அவரை நம்பவில்லை. ஏனென்றால், அவர் பல சமயங்களில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். சந்திரபாபு நாயுடு தோற்றுவிட்டார். மக்கள் அவரின் இந்த போராட்டத்திற்கு எப்போதும் மரியாதை கொடுக்கமாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.