கருப்புப் பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை செப்டம்பர் 3ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனிடையே, அவருக்கு செப்டம்பர் 13ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றுடன் அவர் காவல் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது. விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுக்கிறார், விசாரணையின்போது வழக்குக்கு தொடர்பில்லாத பதில்களை அளிக்கிறார் எனக் கூறி காவலை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் செப்டம்பர் 17ஆம் தேதிவரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா அமலாக்கத்துறை முன் ஆஜராகி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.