டெல்லியில் கரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி கலந்துகொண்ட கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனில் சவுத்ரி 11 பரிந்துரைகளை உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கரோனா நிலைமையை "தவறாக வழிநடத்துகிறார்" என்றும் குற்றம் சாட்டினார்.
கூட்டத்தில் பேசிய அனில் சவுத்ரி, "சரியாக வென்டிலேஷன் வசதி இல்லாததால் தனிமைப்படுத்தப்பட்ட ரயில்வே பெட்டிகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை தவிர்க்க வேண்டும். டெல்லி வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குளிர்சாதன வசதியுள்ள ரயில் பெட்டிகளை உபயோகித்தால் சரியாக இருக்கும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய தனிமை வார்டுகளாக பல்கலைக்கழகங்கள் மற்றும் விடுதிகளைப் பயன்படுத்தினால் எளிதாக இருக்கும். களப்பணியில் உயிரிழப்போருக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.