குஜராத் மாநிலத்திலுள்ள எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைமை மீது தங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் பின்னர் அவர்கள் பாஜகவில் சேர்ந்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா காரணமாக குஜராத்தில் காலியாகவுள்ள எட்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.
பாஜக சார்பில் இந்த எட்டு தொகுதிகளில், ஐந்தில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டியிடவுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, "காங்கிரஸ் கட்சியிலிருக்கும் எம்எல்ஏக்களை பணம் கொடுத்தும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகக் கூறியும் பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டங்கள் கீழ் இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த மோசடி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.
மேலும், பாஜகவிடம் இருந்து தாங்கள் பணம் பெற்றுகொண்டதாக ராஜினாமா செய்த இரு எம்எல்ஏக்கள் ஒப்புக்கொண்ட ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உ.பி-யில் மீண்டும் ஒரு கொடூரம்: துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை